உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும் என புதின் மேக்ரானை எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய ரஷ்ய ஜனாதிபதியாகிய புதின், உக்ரைன் இராணுவ படைகள் தொடர்ச்சியாக Zaporizhzhia அணுமின் நிலையம் மற்றும் அணுக்கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்த போவதாக தெரிவித்துள்ளார். இதனால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும் என்று கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யப் போரில், Zaporizhzhia அணுமின் நிலையம் தற்போது மையப் பொருளாகியுள்ளது. அதனால், பயங்கர அணுக்கதிர் அபாயம் உருவாகியுள்ளதாக கவலை ஏற்பட்டுள்ளது.
Zaporizhzhia அணுமின் நிலையத்திலிருக்கும் ரஷ்ய நிபுணர்கள் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடவடிக்கைகள் எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ள புதின், இந்த விடயத்தில் அரசியல் ரீதியிலல்லாத தீர்வு காண்பதற்கு சம்மதிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணு ஏஜன்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ தயாராகயுள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் Zaporizhzhia அணுமின் நிலையத்திலுள்ள கனரக மற்றும் எளிய வகை ஆயுதங்களை விலக்கிக் கொள்ளுமாறு புதினை மேக்ரான் கேட்டுக்கொண்டுள்ளதாக எலிசி மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.