Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட துறைமுகம்…. அரசின் உத்தரவை மீறியதால்…. மீனவர்களுக்குள் பெரும் மோதல்….!!!!

துறைமுகத்தை திறந்து விசைப்படகுகளில் உள்ள மீன்களை மீனவர்கள் விற்பனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த மீன்பிடி துறைமுகத்தின் முக துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர்கதை ஆகிவிட்டது. இங்கு இதுவரை 29 மீனவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மீன்பிடி துறைமுகத்தை மறுசீரமைக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தனர்.    இதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின் ரூபாய் 245 கோடி செலவில் துறைமுகம் மறுசீரமைப்பு பணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் துறைமுக கட்டுமான பணி தொடங்கி முடியும் வரை துறைமுகத்தை மூடவும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்று கடந்த 1 ஆம் தேதி முதல் மீன்பிடி துறைமுகமானது மூடப்பட்டது. இதனால் அந்த சமயத்தில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் முக துவாரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.

இதனால் அதில் உள்ள மீன்களையும் இறக்க முடியாமல் போயிற்று. குறிப்பாக முக துவாரத்தில் நிறுத்தப்பட்ட 9 விசைப்படகுகளில் ரூபாய் 1 கோடி மதிப்பிலான மீன்கள் தேக்கமடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாவட்ட நிர்வாகிகளின் உத்தரவின் படி 9 விசைப்படகுகளில் உள்ள மீன்களையும் இறக்கி விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மறு அறிவிப்பு வரும் வரையில் துறைமுகம் மூடப்படுவதாக அங்கு விளம்பரப் பலகையும் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற சுமார் 40க்கும் மேற்பட்ட படகுகளில் பிடித்து வந்த மீன்களை இறக்க முடியாமல் மீனவர்கள் தவித்து வந்தனர். அவற்றில் சில படகுகள் அரசின் உத்தரவையும் மீறி துறைமுகத்தை திறந்து மீன்களை இறக்கி விற்பனை செய்துள்ளனர். இதற்கு ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதே நிலை தொடர்ந்தால் அங்கு பெரிய பிரச்சனை ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது “கேரளப் பகுதியில் மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்று மீன்களைக் கொண்டு வந்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இறக்கி உள்ளனர். ஆனால் இதனை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அதேவேளை அதிகாரிகள் வல்லத்தில் மீன்பிடிக்கும் சாதாரண மீனவர்களின் மீன்களை துறைமுகத்தில் அனுமதிக்காமல் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |