கடலூரை அடுத்த ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியில் திராவிடர் கழக மூத்த உறுப்பினர் கோதண்டபாணி கமலா அம்மாள் அவர்களின் படத்திறப்பு விழாவில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் ஊடகங்களை சந்தித்த அளித்த அவர், ’முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நிரபராதிகளான என் மகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனையில் இருந்து வருகிறார்கள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்திற்கு காரணமான “குண்டு வெடிப்பு” வழக்கு சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கின் விசாரணையில் குண்டை யார் தயாரித்தது என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு, குண்டு தயாரித்தது சம்பந்தமாக முழுமையாக விசாரிக்கவில்லை என சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக உண்மைக்கு புறம்பாக விசாரணை அதிகாரி பதிந்த வாக்குமூலத்தால் செய்யாத குற்றத்திற்காக 29 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து உள்ளேன். ஆகையால் என்னை விடுதலை செய்ய வேண்டும். மேலும் எப்போது விசாரணை நடந்தாலும் இந்த வழக்கில் நான் கண்டிப்பாக இணைவேன். அதுவரை என்னால் சிறையில் இருக்க முடியாது என பேரறிவாளன் கூறினார்.
இது மட்டுமின்றி உச்சநீதிமன்றம் கூறியும் ஆளுனர் நீண்ட அவகாசம் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் நேரடியாக ஆளுநரை வலுக்கட்டாயமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது, அதற்கு மாறாக தமிழ்நாடு அரசு அழுத்தம் தந்து இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக தலையிட முடியாது என்பது மட்டும் தெரிவித்து வருகிறார்கள். அது ஏன் என தெரியவில்லை. நாங்கள் சட்டத்தின்படி தான் இதுவரை இந்த வழக்கை அணுகி வருகின்றோம். பேரறிவாளன் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வருக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம்.
இதன் மூலம் தமிழ்நாடு முதல்வர் ஆளுநரை அணுகி பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்ய அரசு சார்பில் கொடுக்கப்படுள்ள கடித்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேட்க வேண்டும். எழுவரையும் விடுதலை செய்ய மீண்டும் அரசு சார்பில் முதல்வர் வலியுறுத்த வேண்டும். இதனை இந்த அரசு செய்யும் என்ற நம்பிக்கையோடு நான் காத்திருக்கிறேன்’ என கூறினார்.