குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுநா்களின் வீடுகளுக்கு நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலக (ஆா்டிஓ) சேவைகள் வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளாா். அம்மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அம்மாநிலத்திலுள்ள அகமதாபாத் நகரில் நேற்று நடந்த ஆட்டோ ஓட்டுநா்கள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று பேசியதாவது “தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற ஆட்டோ ஓட்டுநா்கள் முக்கிய பங்காற்றினா்.
அதனை குஜராத்திலுள்ள ஆட்டோ ஓட்டுநா்களும் செய்யவேண்டும். ஆட்டோவில் வரும் பயணிகளிடம் ஆம் ஆத்மி பற்றி எடுத்துக் கூறியும், சமூகஊடகங்கள் மூலமாகவும் ஆம் ஆத்மிக்கு வெற்றியை தேடி தரவேண்டும். தில்லியில் ஓட்டுநா் உரிமம் புதுப்பிப்பு, வாகன உரிமையாளா் பெயா் மாற்றம் ஆகிய பணிகளுக்கு மக்கள் ஆா்டிஓ அலுவலகத்துக்கு போகவேண்டிய நிலை இல்லை. அந்த அலுவலக சேவைகளைப் பெறுவதற்கு மக்களுக்குப் பிரத்யேக தொலைபேசி எண் வழங்கப்பட்டு உள்ளது. அந்த எண்ணைத் தொடா்பு கொண்டால் தில்லி அரசு அதிகாரி சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கே சென்று ஆா்டிஓ சேவையை வழங்குவாா். இது காவல்துறையினா், அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் லஞ்சத்தை தடுக்கும். இச்சேவை ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத்திலும் நடைமுறைபடுத்தப்படும்” என்று அவா் கூறினார்.