குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த ஜனவரியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல ஜாமியா மிலியா மாணவர்கள் முயன்றனர். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொது மக்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர். அப்போது, அங்கு வந்த காவல் துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தி பேரணியை கலைத்தனர்.
அதேபோல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமின்றி ஜாமியா பல்கலைக்கழக நூலகம் வரை சென்ற காவல் துறையினர், அங்கிருந்த மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளபக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த சிசிடிவி காட்சியை நாங்கள் வெளியிடவில்லை என ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.