கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்-கேரளா எல்லையான வழிகடவில் கேரளாவை சேர்ந்த மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இவர்கள் குறிப்பாக கூடலூரில் இருந்து வரும் வாகனங்களை மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சமயத்தில் கூடலூரில் இருந்து ஒரு ஜீப்பில் வந்த தம்பதியை நிறுத்தி உள்ளனர். அந்த ஜீப்பிற்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தம்பதியையும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களையும் விசாரணை செய்துள்ளனர்.
இந்த விசாரணையில் கூடலூரில் தோட்டம் வைத்து இருப்பதாகவும் அங்கு பணியாற்றுவதற்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்று இறக்கிவிட்டு திரும்பி வருவதாகவும் தம்பதி கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் போலீசார் மோட்டார் சைக்கிளையும் ஜிப்பையும் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட மற்றும் விலை உயர்ந்த எம்.டி.எம் போதை பொருள் தலா 25 கிராம் கொண்ட மூன்று பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் கடத்தி வந்த நான்கு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையில் பெங்களூருக்கு சென்று விட்டு திரும்பும்போது போதை பொருளை கூடலூர் வழியாக கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனால் அஸ்லம் மூதின், அவருடைய மனைவியான சபீனா, முகமது சாதத், கமருதீன் ஆகிய நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.மேலும் அவர்களிடம் இருந்து போதை பொருளையும் பறிமுதல் செய்துள்ளனர்.