ரயில் நிலையத்தில் ஊர்ந்து சென்ற அரியவகை வெள்ளை நிற நாகப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் மூன்றாவது மாடியில் வணிக அலுவலகம் அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வளாகத்தில் உள்ளே வித்தியாசமான நேரத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.
இதனை அடுத்து 2 1/2 அடி நீளமுடைய பாம்பு வேளச்சேரியில் இருக்கும் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வடமாநிலங்களில் இருந்து வனப்பகுதி வழியாக வரும் ரயில்களில் ஏறி இந்த பாம்பு சென்னைக்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர். பிறவி குறைபாடு காரணமாக இந்த பாம்புகள் வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.