இங்கிலாந்து நாட்டில் மறைந்த ராணி 2-ம் எலிசபெத் மிகப்பெரிய நாய் பிரியர் ஆவார். தனது வாழ்நாளில் 30-க்கும் மேற்பட்ட கோர்கிஸ் ரக நாய்களை வளர்த்துள்ளார். கடைசியாக அவரிடம் மிக் மற்றும் சாண்டி என்ற 2 இளம் நாய்கள் இருந்தன. அத்துடன் கேண்டி என்ற டோர்கி ரக நாய் ஒன்றும் இருந்தது. தற்போது ராணி மறைந்ததை தொடர்ந்து இந்த நாய்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில், இந்த நாய்களை இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது முன்னாள் மனைவி சாரா ஆகியோர் பராமரிக்கயுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதை ஆண்ட்ரூ குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர். மிக் மற்றும் சாண்டி ஆகிய 2 நாய்க்குட்டிகளை கடந்த ஆண்டு ஆண்ட்ரூவும், அவரது மகள்களும் தான் ராணி எலிசபெத்துக்கு பரிசளித்துள்ளனர். தற்போது மீண்டும் அவை ஆண்ட்ரூ குடும்பத்தினரிடமே வந்துள்ளது.