மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓடப்பள்ளி பகுதியில் வசிக்கும் 29 வயது வாலிபர் வேலை காரணமாக ஈரோடுக்கு சென்றுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் அந்த வாலிபர் நின்று கொண்டிருந்தார். அப்போது கேரளாவை சேர்ந்த ஜிபு(26) என்பவர் தன்னை வாலிபரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனை அடுத்து தான் பால தண்டாயுதம் வீதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக ஜிபு தெரிவித்துள்ளார். அங்கு மூன்று பெண்கள் இருப்பதாகவும் 2000 ரூபாய் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் ஜிபு வாலிபரிடம் கூறியுள்ளார். அதற்கு சரி என்று கூறி வாலிபர் ஜிபு உடன் மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்த கேரளாவை சேர்ந்த சிஜோ(25) என்பவர் மூன்று பெண்களில் உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறது என கேட்டுவிட்டு மற்றொரு அறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்கள் தங்களை கட்டாயப்படுத்தி இருவரும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். எங்களை எப்படியாவது இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள் என வாலிபரிடம் கூறியுள்ளனர். இதனால் தன்னிடம் பணம் குறைவாக இருக்கிறது ஏ.டி.எம் மையத்திற்கு சென்று பணம் எடுத்து வருகிறேன் என கூறிவிட்டு வாலிபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றள்ளார்.
இதுகுறித்து வாலிபர் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஈரோடு தாலுகா போலீசார் 3 பெண்களையும் மீட்டனர். பின்னர் ஜிபு, சிஜோ ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இருவரும் புரோக்கர்களாக செயல்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சார தொழில் நடத்தியது தெரியவந்தது. இதனை எடுத்து போலீசார் மூன்று அழகிகளையும் கோவையில் இருக்கும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.