நாகர்கோவிலை சேர்ந்த அயறின் அமுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் எனது மகள் இதழ் வில்சன் நாகர்கோவில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டம் படித்து வருகிறார். இந்நிலையில் தனது மகள் கடந்த 6 ஆம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து கன்னியாகுமரி வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து எனது மகள் பப்ஜி மற்றும் ஃப்ரீ ஃபயர் ஆகிய ஆன்லைன் விளையாட்டுகளில் களில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதன் மூலம் என் மகளுக்கு ஜெப்ரின் என்பவர் பழக்கம் ஆகியுள்ளார்.
எனவே அவர் தான் நண்பருடன் சேர்ந்து எனது மகளை கடத்திருக்க வேண்டும். எனவே எனது மகளை மீட்டு தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த மனு நீதிபதி மகாதேவன் அவர்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய அரசால் ஆன்லைன் விளையாட்டுக்கான ஃபிரீ ஃபயர் தடை செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் இந்த விளையாட்டை எவ்வாறு மீண்டும் விளையாட முடிகிறது, குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்? ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் இது போன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தடை செய்யப்பட்ட இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதே அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, இது குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.