பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று திருவண்ணாமலை அருணாச்சல அருணாச்சலேஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள கிரிவல பாதையில் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த நிலையில் கடந்த 9 தேதி மாலை 6.30 மணியளவில் தொடங்கிய பௌர்ணமி நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு முடிவடைந்தது.
இந்த பௌர்ணமி தினத்தை ஒட்டி திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்றுள்ளனர். இதனால் கோவிலில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். சிலர் வரிசையில் காத்திருக்க முடியாமல் இரும்பு தடுப்பு கம்பிகள் மேலே ஏறி உள்ளே செல்ல முற்பட்டுள்ளனர். இதனால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்து கூச்சலிட்டனர். அதன்பின்னர் கோவிலின் பணியாளர்கள் வந்து அதனை சரி செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.