ஆஸ்திரேலியா நாட்டின் தெற்கே பெத் நகரில் ரெட் மவுண்ட் பகுதியை சேர்ந்த பீட்டர் டைஸ் என்பவருக்கு 77 வயதாகிறது. இவர் தனது வீட்டில் மூன்று வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வளர்ந்து வந்த கங்காரு நேற்று அவரை கடுமையாக தாக்கியுள்ளது. கால்களால் அவரை கடுமையாக அடித்துள்ளது. இதனால் படுகாயம் அடைந்த பீட்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் பீட்டருக்கு முதலுதவி செய்ய முயற்சித்தனர். ஆனால் பீட்டரை தாக்கிய செல்லப்பிராணி கங்காரு அவர் அருகே மருத்துவக் குழுவை செல்ல விடாமல் தடுத்து தாக்க முயற்சித்தது. இதையடுத்து கங்காருவை போலீசார் சுட்டுக்கொன்றனர். பின்னர் பீட்டரை மீட்ட மருத்துவ குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர். கங்காரு தாக்குதலில் படுகாயம் அடைந்த பீட்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.