இன்று காலை முதல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தி முடித்த நிலையில் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான் குடியிருப்பது அப்பார்ட்மெண்ட். மூணு ரூம், ஒரு ஹால், 2000 ஸ்கொயர் பிட்டு இருக்கு. இங்கே 12:30 மணி நேரம் சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஒரு முழுமையான அரசு இயந்திரத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு பயன்படுத்தியுள்ளது.
எத்தனையோ மக்களைப் பிரச்சினைக்கெல்லாம் மறந்துவிட்டு, ஒரு தனிப்பட்ட நபரின் மீது கொண்ட காட்டத்தால், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டத்தினுடைய பிரதிபலிப்பாக இந்த சோதனையை நான் கருதுகின்றேன்.இந்த காலகட்டத்தில் எங்களுக்கு கழக ரீதியாக துணை நின்ற மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி அவர்களுக்கும், நேரில் வருகை தந்த மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் அண்ணன் சிவி சண்முகம் அவர்களுக்கும், மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் அண்ணன் ஜெயக்குமார் அவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அண்ணன் தலைவாய் சுந்தரம் அவர்களுக்கும்,
தென் சென்னையினுடைய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் அவர்களுக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் உள்ளிட்ட இங்கு இருக்கக்கூடிய வட்டக் கழக, பகுதிகழக, அனைத்து நிர்வாகிகள், புதுக்கோட்டை மாவட்டத்தினுடைய கழக நிர்வாகிகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் இந்த நேரத்திலே சொல்லுகின்றேன் என பெயர்பட்டியலை அடுக்கி அதிமுக நிர்வாகிகளை மனம் குளிரச் செய்தார்.