Categories
சினிமா சேலம் மாவட்ட செய்திகள்

திரைப்படங்கள் எங்களைக் கொச்சைப்படுத்துகின்றன – தீர்மானம் போட்ட பிராமணர் சங்கம்!

தமிழ்த் திரைப்படங்களில் பிராமண சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் காட்சிகளை முழுமையாக தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சேலத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்துக்கு சேலம் சின்னதிருப்பதி கிளை தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார்.

Movies are offending us Brahminical society

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘தற்போது வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் நமது பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் காட்சிகளை வசனங்களை வேண்டுமென்றே திரைக்கதைகளில் திணித்து மக்கள் மத்தியில் நம்மை பற்றி தவறான எண்ணங்களை உருவாக்குகிறார்கள். இதனை நாம் விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதனைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்களில் பிராமண சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களுக்கு வருடம்தோறும் இலவச மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும், சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அரசால் தொடங்கப்பட்ட மேம்பால பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பொருளாதார அடிப்படையில் முற்பட்ட சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மாநில அரசு உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், சங்கம் மூலமாக நடத்தப்படும் நலதிட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டில் 10ஆவது, 12ஆவது வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகளும், கல்வி உதவித் தொகையும் சங்கத்தினரால் வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் சாய்ராம், மாநில மூத்த ஆலோசகர் ஸ்ரீராமன், மகளிர் அணி செயலாளர் அலமேலு கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். அத்துடன் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Categories

Tech |