பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக திருமலை திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் வழக்கம்போல் திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதோடு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து விழாக்களும் தற்போது படிப்படியாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தானத்தினர் செய்து வரும் நிலையில் பக்தர்களின் வசதிக்காக 300 சிறப்பு பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதில் குறிப்பாக மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மின்சார பேருந்தை ஒலெக்ட்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த பேருந்தில் 36 இருக்கைகளுடன் கூடிய குளிர்சாதன வசதியும் இருக்கிறது. இந்த பேருந்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். இதில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையை பிரம்மோற்சவ விழா துவக்கத்தின் போது ஆந்திர மாநில முதல்வர் துவங்கி வைப்பார் என்று தேவஸ்தானத்தினர் கூறியுள்ளனர்.