ஹர்ஷல் படேலின் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதற்கு முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடுப்பான பதிலளித்துள்ளார்..
ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே அணியை அறிவித்து விட்டன.. இந்த நிலையில் ஆசிய கோப்பை முடிவடைந்தபின் நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) டி20 கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவித்தது.
இந்த அணியில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பிடித்த பெரும்பான்மையான வீரர்கள் இடம் பிடித்து இருக்கின்றனர். மேலும் காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்காமல் இருந்த ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இடம் பிடித்துள்ளனர்.. இவர்கள் இருவரை தவிர்த்து பெரிய மாற்றம் எதுவும் அணியில் நிகழவில்லை. அதே சமயம் ஒரு சில மாற்றங்கள் மட்டும் நிகழ்ந்துள்ளது. இந்திய அணி தேர்வு குறித்து பலரும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதேபோல பெரிதும் பரீட்சயம் இல்லாத ஹர்ஷல் படேல் ஆஸ்திரேலியா மைதானத்தில் எப்படி பந்து வீசப் போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்..
இந்நிலையில் ‘ஸ்போர்ட்ஸ் தக்’ நடத்திய கேள்வி-பதில் அமர்வின் போது, ஒரு ரசிகர் ஹர்ஷல் படேலின் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கரிடம் கேள்வி எழுப்பினார், அதாவது ஹர்ஷல் படேல் ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள அந்த வேகமான ஆடுகளத்தில் எவ்வாறு எப்படி எவ்வாறு பந்து வீசுவார்? அவரது ஓவரில் சாதாரண பேட்ஸ்மேன்கள் கூட எளிதாக சிக்ஸர்களை அடித்து விடுவார்கள் தானே? என்று கேள்வி எழுப்பினர்
அதற்கு பதிலளித்த சுனில் கவாஸ்கர், “போட்டி தொடங்கியவுடன் பார்ப்போம். அவர் மெதுவாக பந்து வீசுவதால் ரன்கள் கொடுப்பார் என்று எப்படி ஏற்கனவே முடிவு செய்ய முடியும்? முன்கூட்டியே இந்த முடிவுக்கு ஏன் வருகிறீர்கள்? முதலில் போட்டி நடக்கட்டும்” என்று கடுப்பாக பதிலளித்தார். மேலும் அவர், நிர்வாகத்திற்கு மட்டுமே தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட் பற்றிய திட்டம் தெரியும். எனவே ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணியினர் செல்ல போகிறார்களா? அல்லது 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்லப் போகிறார்களா? என்பது அவர்களுக்கு தான் தெரியும் என கூறினார்.