சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னை விட 32 வயது குறைவான பெண்ணை மணந்த நபரிடம் அந்தப் பெண் பல லட்சங்கள் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெரும் பணக்காரரான பஸ்தாரியா(77) இவரின் மனைவி சில வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டார். இதையடுத்து தனிமையில் வாடிய பஸ்தாரி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்.
அதன்படி ஆஷா(45) என்ற பெண் அவரை மணக்க முன் வந்தார். இதன் பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் ஆஷிஸ் , ராகுல் என்ற இருவரும் ஆஷாவுடன் வந்து தங்கினார்கள். இவர்கள் தன்னுடைய சகோதரர்கள் என கணவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் ஆஷா.
இந்நிலையில் தன் பெயரில் பல ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அதை துபாயில் உள்ள உறவினர்களிடம் விற்று பணத்தை உங்களிடம் தர விரும்புகிறேன் எனவும் கணவரிடம் கூறினார். ஆனால் அது தொடர்பான ஆவணங்களை சரி செய்ய ரூபாய் 15 லட்சம் செலவாகும் எனக் கூறி கணவரிடம் இருந்து அந்த பணத்தை கேட்டு வாங்கிக் கொண்டார்.
பின்னர் தொடர்ந்து சில லட்சங்களை அவர் கணவரிடம் வாங்கிஉள்ளார். இவ்வாராக மொத்தம் ரூபாய் 40 லட்சத்தை வாங்கிக் கொண்டார். மேலும் அவரிடம் இருந்து நகைகள், கார் போன்றவற்றை வாங்கிக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக ஆஷா திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இறுதியில் பஸ்தாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததார். அதன் பின்னரே அஷாவின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வந்தது.
போலீசாரின் விசாரணையில் இதே போல 10-க்கும் மேற்பட்ட வயதானவர்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்த பணத்தை வாங்கி ஏமாற்றி தப்பித்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி பெண் ஆஷாவை தேடி வருகின்றனர்.