20000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் வீடு கட்டுபவர்கள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் கழிவு நீர் மேலாண்மையைப் பின்பற்றுவது குறித்து உத்தரவுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்துள்ளது. அதன்படி 20000 சதுர மீட்டர் பரப்பளவில் மேல் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமான பணியை தொடங்குவதற்கு முன்பாக தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். இந்த பரப்பளவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தொழில்நுட்பப் பூங்காக்கள், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து உரிமையாளர்களும் அனுமதி பெற வேண்டும்.
கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இயக்குவதற்கான இசைவாணைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். கட்டிடம் முறையானவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் குடியிருப்போர் நலச் சங்க வாரியத்திடம் விண்ணப்பித்து முறையான இசைவாணை பெற வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பராமரித்து திறம்பட செயல்படுத்த வேண்டும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மரங்கள் வளர்க்க பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரை கண்காணிக்க கருவி பொருத்தி வாரியத்துடன் இணைக்க வேண்டும். திடக்கழிவுகளை முறையாக சேகரித்து கையாள வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும். மழைநீர் சேகரிப்பு வசதிகள் ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும். டீசல் ஜெனரேட்டர் களுக்கு ஒலிக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்த வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டது தெரிய வந்தால் மின் இணைப்பை துண்டித்து சீல் வைக்கலாம். உரிமையாளர் மீது சுற்றுசூழல் இழப்பீட்டுத் தொகை விதிக்கப்படுவதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரலாம். சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை எடுத்துச் சென்று சாலையோரம் கொட்டினால் பறிமுதல் செய்து வழக்கு தொடரலாம்.