Categories
மாநில செய்திகள்

“இனி பெருமளவு குற்றங்கள் குறைந்து விடும்” பள்ளி மாணவர்களுக்காக சிற்பி திட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் சிற்பி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் சிற்பி திட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும், சிற்பி திட்டத்தில் இணைந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளையும் வழங்கினார். அதன்பின் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது, காவல்துறை மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். அதற்கேற்ப பொதுமக்கள் அனைவரும் காவல் துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். என்னுடைய எண்ணம்  மட்டும் கிடையாது. அதுதான் எல்லாருடைய எண்ணமும். பொதுமக்களும் காவல்துறையும் இணைந்து செயல்பட்டாலே பெரும் அளவு குற்றங்கள் குறைந்து விடும். ஏன் குற்றங்கள் நடப்பதற்கு கூட வாய்ப்பே கிடையாது.

பொது மக்களையும் காவல்துறையையும் இணைப்பதற்காக பல்வேறு நடைமுறைகள் இருப்பது போன்று தான் தற்போது சிற்பி என்ற திட்டமும் நடைமுறைப்படுத்தபட்டது என்றார். அதன்பின் சிற்பி திட்டத்தின் உறுதி மொழி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள 100 அரசு பள்ளிகளில் இருந்து  8-ம் வகுப்பு படிக்கும் 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு உடற்பயிற்சி, நற்பண்புகள் குறித்த வகுப்புகள் நடத்தப்படுவதோடு, 8 வகையான சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு வரலாறு, கல்வி மற்றும் பொது அறிவு குறித்து எடுத்துரைக்கப்படும்.

அதோடு உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி மற்றும் கவாத்து போன்றவையும் கற்றுக் கொடுக்கப்படும். மேலும் இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகாமல், ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நல்ல ஒழுக்கம் உடையவர் களாகவும், சட்ட மற்றும் ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்காகவும், தான் கற்ற கல்வியையும், ஒழுக்கத்தையும் பிறருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதற்காக தான் காவல்துறையிடம் இணைந்து மாணவர்கள் செயல்பட வேண்டும் என்பதற்காக சிற்பி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |