மெட்ரோ ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
மெட்ரோ ரயில் ஊழியர்கள் பல்வறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்., 25ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மெட்ரோவில் வேலை செய்த பலர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் ஏழு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திடம் மற்ற ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகளை எதிர்த்து பேசியதாக 9 பேரை பணியிடை நீக்கம் செய்தனர்.
இந்நிலையில் இவர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்., 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊழியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனை தடுக்க தொழிலாளர்கள் நல ஆணையர் முன்னிலையில் மெட்ரோ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் போராட்டம் அறிவித்தபடி நடக்கும் என மெட்ரோ ஊழியர்கள் கூறியுள்ளனர்.