செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அண்மைக்காலமாக புதிய தமிழகம் கட்சியினுடைய அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டைகள் போடுகின்ற சூழ்நிலை உருவாகி வருகின்றன. குறிப்பாக காவல்துறையை பயன்படுத்தி எங்களுடைய அரசியல் ரீதியான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும், முடக்கி போடுவதற்கு உண்டான சதி செயல்கள் நடைபெறுகின்றன. புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆண்டுக்கு மூன்று நிகழ்ச்சிகளை தொடர்ந்து தவறாமல் நடத்தி வருகிறோம்.
ஒன்று ஜூலை மாதம் 23ஆம் தேதி அதாவது 1999 ஆம் ஆண்டு மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உடைய உரிமைக்காக போராடி தாமிரபரணியில் உயர்நீத்த 17 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய நிகழ்ச்சியை தொடர்ந்து நாங்கள் ஜூலை மாதம் 23ஆம் தேதி அனுசரித்து வருகிறோம். 2ஆவது,1957ஆம் ஆண்டு தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடி படுகொலைக்கு ஆளான தியாகி இம்மானுவேல் சேகரனார் உடைய நினைவு நாளை,
செப்டம்பர் 11 ஒவ்வொரு ஆண்டும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பல்லாயிரம் கணக்கான மக்களோடு அங்கு சென்று நாங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறோம். அதேபோல டிசம்பர் 15ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியினுடைய துவக்க விழா நிகழ்ச்சி. எனவே இந்த மூன்று முக்கியமான நிகழ்ச்சிகளையும் ஆண்டுதோறும் நாங்கள் நடத்தி வருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு ஜூலை 23, செப்டம்பர் 11, டிசம்பர் 15 ஆகிய மூன்று நிகழ்ச்சிகளுக்கும் மிகப்பெரிய அளவிற்கு காவல்துறையால் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. அதாவது கிராமங்களுக்கு சென்று வாகனங்கள் கொடுக்கக் கூடாது என்று காவல்துறையால் வாகன ஓட்டிகள் மிரட்டப்படுகிறார்கள் என தெரிவித்தார்.