தமிழ்நாட்டின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) படிக்கும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக 33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று, மதுரை நெல்பேட்டையிலுள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு தனது கையால் பரிமாறிய முதல்வர், அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். அப்போது, அருகில் இருந்த மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிலையில், இந்திய அளவில் ட்விட்டரில் #TNBreakfast என்ற ஹேஷ்டேக் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.