பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவூப். இன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 66 வயது கிரிக்கெட் நடுவரான அசாத் ரவூப் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். இந்த செய்தியை அவரது சகோதரர் உறுதி செய்துள்ளார். மேலும் லாகூரில் உள்ள லாண்ட் பஜாரில் தனது துணி கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவருக்கு நெஞ்சில் ஒருவித வலி ஏற்பட்டதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
13 ஆண்டுகளில் 231 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இவர் 2000 ஆம் ஆண்டில் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் நடுவராக பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டில், ஐசிசியின் எலைட் பேனலில் இடம் பெற்ற அவர் 2013 வரை அங்கம் வகித்தார். அவர் 64 டெஸ்ட் போட்டிகள், 139 ஒருநாள் போட்டிகள், 28 டி20 போட்டிகள் மற்றும் 11 பெண்கள் டி20 போட்டிகளில் நடுவராக மற்றும் டிவி நடுவராக பணியாற்றினார். ஐபிஎல் போட்டிகள் உட்பட 40 முதல் தர போட்டிகள், 26 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 89 டி20 போட்டிகளிலும் அவர் நடுவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.