கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதனைத் தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். இதனையடுத்து முழுநேரத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 11 ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் உட்கட்சி தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதனன் மிஸ்திரி தலைமையில் மாநில அளவில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், திட்டமிட்டபடி புதிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் தேர்தலை இந்த மாத 14ஆம் தேதியிலிருந்து 20 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கும்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு மதுசூதனன் மிஸ்திரி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளுக்கும் “கியூ ஆர்” கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை அளிக்குமாறு கூறினார். இந்த தேர்தலில் மொத்தம் 9,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஓட்டு போட உள்ளனர். இவர்களின் பெயர்கள் 20 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்க ராகுல் காந்தி இன்னும் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. அதனால் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பெயர் தலைவர் பதவிக்கு அடிப்படைகிறது. அவர் சோனிய காந்தி குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்றவர். ஆனால் சோனியா காந்தி குடும்பத்தினர் அல்லாத வெளிநபர் நிறுத்தப்பட்டால் தானும் போட்டியிட போவதாக சசிதரூர் எம்.பி. அறிவித்துள்ளார். மேலும் வாக்களிப்பவர்கள் பட்டியலை வெளியிடுமாறு அவர் கூறியுள்ளார். வேட்புமனு ஏற்கப்பட்டவுடன், வாக்காளர் பட்டியல் நகல் அளிக்கப்படும் என்று தேர்தல் பிரிவு உறுதி அளித்துள்ளது.