புதிய தமிழகம் கட்சி சார்பாக நடைபெறும் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம், தாமிரபரணி நினைவு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு காவல்துறை முறையாக எங்களுக்கு அனுமதி தர மறுக்கிறது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் நாங்கள் நடத்த இருந்தால் எங்களை ஒடுக்குகிறது. இதனை தடுக்க வேண்டும் என டிஜிபியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிமேலாவது வரக்கூடிய காலகட்டங்களில் எங்களுடைய எந்த விதமான நிகழ்ச்சிகளுக்கும், தடைகளை ஏற்படுத்தக் கூடாது. சரியான அறிவுரைகளை தென் மாவட்டம் குறிப்பாக… தமிழகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு புரிய வைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம்.
அதாவது கீழே இருக்கிற அதிகாரிகளைக் கேட்டால் மேலே இருப்பவர்களின் உத்தரவு என்று சொல்லுகிறார்கள். ஆனால் மேலே இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரிகளை கேட்டால், எங்கள் மீது தனிப்பட்ட முறையிலே எந்தவிதமான முன் விரோதம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அப்போது அதில் வேறு ஏதோ அரசியல் தலையீடாக இருக்குமோ என்று நாங்கள் நினைக்கிறோம்.
இந்த விஷயத்தில் வந்து பொதுவா தமிழ்நாட்டில் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத நெருக்கடிகள், அடக்குமுறைகள் ஒடுக்கு முறைகள், இது போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வருது. இதனை காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு, இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு காண வேண்டும். உங்களுக்கு எல்லாம் தெரியும் என தெரிவித்தார்.