மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை இன்று செலுத்திவிட்டதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.
புதிய தொலைத்தொடர்பு கொள்கை 1999ன்படி ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஏ.ஜி.ஆர்., எனப்படும் சரி செய்யப்பட்ட மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டு உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். அதேபோல் மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ‘ஸ்பெக்ட்ரம்’ எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
நிலுவையில் இருந்த தொகை படி பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூ. 41 ஆயிரம் கோடி என மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ. 92 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, ஏர்டெல் நிறுவனம் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி, வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சுமார், ரூ.16 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். அதோடு பி.எஸ்.என்.எல் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி, எம்.டி.என்.எல் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியும் பாக்கி வைத்திருக்கிறது. இந்த நிலுவைத் தொகையை ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் கோரி, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. ஆனால் அவகாசம் மறுக்கப்பட்ட நிலையில், இன்று நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை இன்று ஏர்டெல் செலுத்திவிட்டது. மேலும் எஞ்சிய தொகையை, மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளது.