Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சையில் அலட்சியம் காட்டிய மருத்துவர்…. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு எவ்வளவு தெரியுமா….? நுகர்வோர் கோர்ட்டு அதிரடி….!!!!

அறுவை சிகிச்சையில் அலட்சியம் காட்டிய மருத்துவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூபாய் 18 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் மாவட்டம் சுங்க கேட் பகுதியில் நல்லாத்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 47 ஆகிறது. இவர் வெகு நாட்களாக தீராத இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது நல்லாத்தாள் ஏற்கனவே எடுத்துக் கொண்ட இரண்டு ஸ்கேன் ரிப்போர்ட்டையும் மருத்துவரிடம் காண்பித்துள்ளார். அதனைப் பார்த்த மருத்துவர் நல்லாத்தாளுக்கு இரண்டு சிறுநீரகங்களிலும் கல்லடைப்பு உள்ளதாகவும் உடனடியாக லேசர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறி இருக்கிறார்.

இதனால் நல்லாத்தாளின் உறவினர்கள் உடனடியாக அவரை அதே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையின் போது அவருடைய சிறுநீர் குழாயில் துவாரம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை மருத்துவர் நல்லாத்தாளிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 27ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு சென்ற நல்லாத்தாள் உட்காரவோ நிற்கவோ நடக்கவோ முடியாமல் கடும் அவதிப்பட்டு உள்ளார்.

இதனால் அதே மருத்துவமனைக்கு மீண்டும் அவர் வந்துள்ளார். அப்போதுதான் அறுவை சிகிச்சையின் போது சிறுநீர் குழாயில் துவாரம் விழுந்ததாக மருத்துவர் நல்லாத்தாளிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரூபாய் 4 லட்சத்து 20 ஆயிரம் செலவில் மூன்று அறுவை சிகிச்சைகள் நல்லாத்தாளுக்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை மருத்துவரின் கவனக்குறைவால் லேசர் அறுவை சிகிச்சையின் போது உடல் வலி, மன உளைச்சல் மற்றும் பண செலவு ஆகியவை தனக்கு ஏற்பட்டதாக கூறி ரூபாய் 20 லட்சம் மருத்துவமனை சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நல்லாத்தாள் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் ரத்தினசாமி கூறியதாவது “மருத்துவர் தனது பணியில் கவனக் குறைவாக இருந்துள்ளார்.

இதனால் நல்லாத்தாளுக்கு ஏற்பட்ட உடல் வலி, மன உளைச்சல் மற்றும் பண செலவு ஆகியவற்றிற்கு இழப்பீடாக ரூபாய் 18,03,181 வழங்க வேண்டும். மேலும் வழக்கு தாக்கல் செய்த தேதி முதல் இழப்பீடுத் தொகை வழங்கும் நாள் வரை 7.5 சதவீத வட்டியுடன் இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும். அத்துடன் செலவு தொகையாக ரூபாய் 10 ஆயிரத்தையும் வழங்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |