Categories
மாநில செய்திகள்

இன்ப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு… 8 பேர் உயிரிழப்பு… தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை மற்றும் வெயில் என மாறி மாறி நிலவி வருவதால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸ் காய்ச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 300 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சென்னை மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, நெல்லை போன்ற மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு இது போன்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகின்றது.

இந்த சூழலில் தமிழகத்தில் 282 குழந்தைகள் இன்ப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது பற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசும்போது, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 121 குழந்தைகள் சாதாரண காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மேலும் 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தமிழகம் முழுவதும் 282 குழந்தைகள் இன்ப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இது இதில் 13 குழந்தைகள் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். மேலும் டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் 243 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் டெங்குவை ஒழிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தேவையான அளவு மருந்து அரசிடம் கையிருப்பில் இருக்கிறது. மேலும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும். இதனால் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |