நீதித்துறையை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என ரெட் பிக்ஸ் என்ற யூடியூபில் சேனலில் கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாதங்கள் சிறையில் தண்டனை வழங்கி ஜி.ஆர் சுவாமி நாதன், புகழேந்தி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இது தொடர்பாக ஏற்கனவே கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று வழக்கை ஜி.ஆர் சுவாமிநாதன், புகழேந்தி நீதிபதி கள் சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அவரது தரப்பில் குறிப்பிடும்போது, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது உயர் நீதிமன்ற மதுரை கிளை வரம்பிற்கு உட்பட்டதல்ல. எனவே இந்த வழக்கை மதுரை கிளை விசாரிக்க இயலாது. அதேபோல தன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக கூறப்படும் பதிவு குறித்து அவருடைய விளக்கத்தை முன் வைத்தார்.. நீதி துறையில் இட ஒதுக்கீடு என்பது முறையாக பின்பற்றப்படவில்லை, பிராமணர்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 3 சதவீதம் இருந்தாலும் நீதி துறையில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
பட்டியல் இனத்தை சேர்ந்த நீதிபதி எண்ணிக்கை மிகக் குறைவு, அதேபோல அருந்ததியர் இடத்தில் இருந்து ஒரு நீதிபதி கூட இல்லை.. பட்டியலின நீதிபதிகள் வழக்குகளை கையாளும்போது மிகவும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது. இது தொடர்பாக பல நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அமைப்புகள் தரவுகளை குறிப்பிட்டு இந்த கருத்தை பதிவு செய்தேன்.. எனது கருத்தை பார்க்கும் போது மிகுந்த பிரச்சினை ஏற்படுத்தும் வகையாக தோன்றலாம். ஆனால் அதன் பின்புலத்தோடு அதனை பார்க்கும்போது உண்மை தன்மை விளங்கும். நீதி துறையின் மதிப்பை குறைப்பது, களங்கப்படுத்துவதோ எனது நோக்கம் அல்ல.. நீதிமன்ற உத்தரவுகளை விமர்சித்ததுண்டு.. அதேபோல பேச்சுரிமை என்பது அதற்கான உரிமையை வழங்குகிறது என குறிப்பிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் வழக்கின் உத்தரவு பிறப்பிப்பதற்காக சிறிது நேரம் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர்.. இந்நிலையில் மீண்டும் கூடிய நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு இந்த வழக்கில் 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.. அதேபோல நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு காரணமான பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொழில்நுட்பத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே தற்போது சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், உத்தரவுகள் வழங்கப்பட்ட உடனேயே அவர் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது..