பூட்டிய வீட்டிற்குள் வாலிபர் அழுகிய நிலையில் சடலமாக கடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளத்தில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி அஸ்வதி(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த மைக்கேல் கடந்த ஜூன் மாதம் சொந்த ஊருக்கு வந்து வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேரி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மைக்கேல் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு மைக்கேலின் வீடு பூட்டி கிடந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் மைக்கேல் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் மைக்கேலின் சடலம் கிடந்ததை பார்த்த போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் மைக்கேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.