கஞ்சா விற்ற ரவுடிகள் உட்பட 433 பேர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர் ராயப்பேட்டையில் திருவிக சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் அருகில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பூங்காவிற்கு போலீசார் மாறுவேடத்தில் சென்று கண்காணித்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரத், அருண், ரமேஷ் அரவிந்த் ஆகிய மூன்று பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ஆறு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் இதில் சரத் என்பவர் மீது இரண்டு கொலை வழக்கு உட்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும் அவருடைய பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதன் பேரில், சென்னை மாநகரில் நேற்று முன்தினம் ரவுடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் ஐந்து ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட 7 ரவுடிகளும் கைது செய்யப்பட்டு அதற்குரிய கோர்ட்டுகளில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் 30 ரவுடிகளிடம் திருந்தி வாழ்வதாக உறுதிமொழி பத்திரமும் எழுதி வாங்கப்பட்டுள்ளது. மேலும் 381 பழைய ரவுடிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம்433 ரவுடிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.