தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை அடுத்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாணவர்களுடைய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் அறிவித்திருந்தார். இதற்கான பணி தற்போது தொடங்கியுள்ளது.
மேலும் முதற்கட்டமாக சென்னையில் நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் சென்னையில் 156 பள்ளிகளில் கேமராக்கள் பொருத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகளின் நுழைவாயில், மைதானம், வளாகம் மற்றும் பிற பகுதிகளில் என்று நான்கு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் 24 மணி நேரமும் இந்த சிசிடிவி கேமராக்கள் இயங்குவதை பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த கேமராக்கள் பொருத்தப்படுவதால் மாணவர்கள் பள்ளிகளில் இருக்கும் நேரங்களில் பாதுகாப்பானாக இருப்பதை உறுதி செய்ய முடியும். இந்த கேமராக்கள் பொருத்த அரசு சார்பாக 5.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.