தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விதத்தில் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சி பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரகப்பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆகவும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி த்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
அவ்வாறு குறைந்தபட்ச மானவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேல்நிலைப்பருவ பிரிவில் 60 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும் அதற்கு மேல் ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் கூடுதல் பிரிவும் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்யும்போது ஒரு ஆசிரியருக்கு வாரத்துக்கு 28 பாட வேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்று கண்காணிக்கவும் அவ்வாறு போதிய பாட வேலை இல்லாவிட்டால் முதுகலை ஆசிரியரை உரிய முறையில் அதற்கு கீழ்நிலை வகுப்புகளான ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு பாடங்களை கற்பிக்க பாடவேளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.