டிக்-டாக் மூலம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் வாலிபரின் திருமணம் நின்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே இருக்கும் கிராமத்தில் 32 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் மற்றொரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ் பெண் ஒருவர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது, டிக் டாக் வீடியோ பதிவிட்டதன் மூலம் அந்த வாலிபருக்கும் எனக்கும் காதல் மலர்ந்தது.அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதனை நம்பி இருவரும் இணைந்து பல டிக்-டாக் வீடியோக்களை வெளியிட்டோம். அந்த வாலிபர் எங்கள் வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக எனக்கு தகவல் வந்தது. எனவே என்னை ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் கூறியுள்ளார். இதனை அடுத்து போலீசார் அந்த வாலிபரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிங்கப்பூரில் வசிக்கும் பெண் ஏற்கனவே தனக்கு திருமணம் ஆனதை மறைத்து என்னிடம் பழகினார். இதனை அறிந்த நான் அவரிடம் இருந்து விலகி சொந்த ஊருக்கு வந்து விட்டேன் என வாலிபர் தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே வாலிபருடன் நடக்கவிருந்த திருமணத்தை மணப்பெண் நிறுத்தியதாக கூறப்படுகிறது.