தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் தென்மண்டல அளவிலான ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற பெயரில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது, தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில்கள் வளர்வது மட்டுமின்றி சிறிய தொழில்களும் சேர்த்து வளர்வது தான். தமிழ் மொழியை வளர்த்த மதுரை இன்று தொழில் வளர்ச்சியிலும் முன்னேறி வருகிறது. இங்கு 50 ஆயிரம் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
இந்த தொழில் நிறுவனங்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மதுரை மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப டைடல் பூங்கா அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த பூங்கா மாட்டுத்தாவணி அருகே அமைக்கப்படும். இதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு 2 கட்டிடங்களாக டைடல் பூங்கா அமைக்கப்படும். இந்த திட்டத்திற்காக 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். மேலும் டைடல் நிறுவனத்தையும், மதுரை மாநகராட்சியையும் இணைத்து டைடல் பூங்கா அமைக்கப்படும் என்றார்.