அரசு போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகர பேருந்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துனராக பணி செய்து வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். பணிநீக்கத்துக்கு ஒப்புதல் கோரி தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அணுகியபோது விசாரணை குறித்து தகவல் முறையாக இணைக்கப்படாததால் பணிநீக்கத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் இந்த விவகாரத்தை மீண்டும் விசாரிக்குமாறு தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் போக்குவரத்து கழகங்களில் தவறிழைக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் ஊழல் உள்ளிட்ட சில காரணங்களால் நடவடிக்கை எடுப்பது இல்லை. அதிகாரிகள் உரிய முறையில் பணிகளை செய்யாததால் அரசுக்கு பெருமளவு இழப்பு ஏற்படுகின்றது. தங்களின் பணிகளை சரியாக செய்யாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் போக்குவரத்து துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் .