தர்மபுரியில் காதலிக்கு காதலர் தினத்தன்று வாழ்த்து தெரிவித்த இளைஞனை விரிவுரையாளர் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் நவீன் (வயது 23) என்பவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கிறார். முன்னதாக நவீன் அரசு கலைக்கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது, அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார்.
இந்த நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியன்று நவீன் தனது காதலிக்கு காதலர் தின வாழ்த்து தெரிவிக்க கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது, கல்லூரி வளாகத்தில் நவீனும் காதலியும் (மாணவி) ஜாலியாக நின்று பேசி கொண்டு இருந்துள்ளனர். இதனைக்கண்டு அங்கு வந்த கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர் கோபி, மாணவியை கண்டித்ததுடன், மட்டுமில்லாமல் நவீனையும் தாக்கி, அவருடைய செல்போனை வாங்கி உடைத்துள்ளார்.
இதனால் நவீன் மனமுடைந்து போனான். தன் காதலி முன்பே தன்னை அடித்ததால், அவன் வீட்டுக்கு சென்று அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை பார்த்த பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர். பின்னர் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நவீனின் உடலை எடுத்து சென்று பேடரஅள்ளியில் இருக்கும் கவுரவ விரிவுரையாளர் கோபி வீட்டு முன்பு வைத்து விட்டு தகராறில் ஈடுபட்டனர். தகராறின் போது சிலர் கோபியின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போலீசார் இளைஞனை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவிக்கு காதலர் தினத்தன்று வாழ்த்து தெரிவித்த இளைஞனை விரிவுரையாளர் தாக்கியதால் மனமுடைந்து போய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.