வாலிபர்கள் வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் வியாபாரியான சதாசிவம்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, எனது கடைக்கு அடிக்கடி ஒரு வாலிபர் பொருட்கள் வாங்குவதற்காக வருவார். இந்நிலையில் வாலிபர் ஒரு நாள் அவரது நண்பருடன் எனது கடைக்கு வந்தார். அவர்கள் கோவையில் இருக்கும் கல்லூரியில் படித்து வருவதாகவும், விடுமுறை நாட்களில் அஸ்திவாரம் தோண்டும் வேலைக்கு சென்று வந்ததாகவும் கூறினர்.
பின்னர் அஸ்திவாரம் தோண்டும் போது புதையலாக 1 கிலோ தங்க நகை கிடைத்ததாகவும், அதனை 10 லட்ச ரூபாய்க்கு விற்க போவதாகவும் இருவரும் கூறியுள்ளனர். அதனை வாங்க விரும்பி ஒரு வாரம் கழித்து வாருங்கள் என நான் கூறினேன். அதன்படி அவர்கள் மீண்டும் வந்த போது ஒரு சிறிய நகையை என்னிடம் கொடுத்து புதையலில் கிடைத்தது என கூறினர். அதனை பரிசோதித்து பார்த்தபோது தங்கம் என்பது உறுதியானது. ஒரு வாரம் கழித்து அவர்களிடம் 10 லட்சம் ரூபாயை கொடுத்தேன்.
அவர்கள் தங்க நகையை கொடுத்து யாரிடமாவது சொன்னால் அரசு அதிகாரிகள் வந்து வாங்கி சென்று விடுவார்கள் என கூறிவிட்டு சென்றனர். இதனை அடுத்து அந்த வாலிபர்கள் கொடுத்த நகையை பரிசோதித்து பார்த்த போது அவை போலியானது என்பது தெரியவந்தது. எனவே 10 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றிய வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதாசிவம் புகாரியில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.