ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டில் 2 நாட்கள் நடைபெறுகின்றது.
2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கர மோதல்களுக்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நாளை நேருக்கு நேர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாகயுள்ளன.
இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019ஆம் ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அதன் பிறகு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்கி இரண்டு நாட்களாக நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
மேலும் இதற்காக அவர் தனி விமானம் மூலம் இந்தியாவிலிருந்து இன்று மாலை புறப்பட்டுள்ளார். பிரதமர் மோடி இரண்டு நாள் உச்சி மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார் என்று பிரபல ஆங்கில செய்தி நாளிதழ் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஜி ஜின்பிங் இடையிலான இருதரப்பு பேச்சு வார்த்தையை இந்தியா இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அதே சமயத்தில் புதினுக்கும் மோடிக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பை ரஷ்யா ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் போது அவர்கள் ஒட்டுமொத்த வர்த்தகம் மற்றும் ரஷ்ய உரங்கள் மற்றும் பரஸ்பர உணவுப் பொருட்கள் விற்பனை குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.