தலைமறைவாக இருக்கும் தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லிபாளையம் பகுதியில் சினிமா தயாரிப்பாளரான பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பார்த்திபன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி பார்த்திபன் பொள்ளாச்சிக்கு வரவழைத்தார். இதனை அடுத்து நடிகைக்கான தேர்வு நடக்கும் போது குளிர்பானத்தில் எனக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்தார். பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ததால் நான் கர்ப்பமானேன். குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது என கூறி கர்ப்பத்தை கலைக்குமாறு பார்த்திபன் கூறினார். அதன்படி கருவை கலைத்தேன்.
எனவே என்னை ஏமாற்றிய பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவி புகாரில் கூறியிருந்தார். இதேபோன்று சினிமாவில் வாய்ப்பு கொடுப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக பார்த்திபன் மீது கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இரண்டு இளம்பெண்கள் புகார் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிந்த போலீசார் தலைமறைவாக இருக்கும் பார்த்திபனை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது பார்த்திபன் 7 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பார்த்திபன் கூறியதாவது,என் மீது புகார் அளித்த அந்த இரண்டு பெண்கள் குறித்து என்னுடன் வேலை பார்க்கும் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் நான் தயாரித்த படத்தில் அவரை நடிக்க வைத்ததாக கூறியிருக்கிறார். நான் 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் அந்த படத்தை தயாரிப்பதற்கு பூஜை போட்டேன். அப்படி இருக்க அவரை எப்படி படத்தில் நடிக்க வைத்திருக்க முடியும். மற்றொரு இளம்பெண்ணுக்கு நான் தேவைப்படும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளேன். அவர் என்னிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. இது அந்த இளம்பெண்ணின் அக்காள், அக்காள் கணவர், தாய், தந்தை என அனைவருக்கும் தெரியும். நான் அவருக்கு பணம் கொடுக்காமல் இருந்ததால் என் மீது இது போன்ற புகார் அளித்துள்ளார்.
தற்போது அவர்கள் என் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குவதற்கு 20 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசிய ஆடியோவும் என்னிடம் இருக்கிறது. முழுக்க முழுக்க என்னிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறியுள்ளனர். எனவே அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என வீடியோவில் பார்த்திபன் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் பார்த்திபன் கூறுவது உண்மையா என்பது குறித்தும் போல சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.