தமிழ் திரையுலகில் 90-களில் கதாநாயகனாக கலக்கியவர்களில் ஒருவர் அர்ஜூன். இவருடைய படங்களில் அதிரடி சண்டைகாட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. இதன் காரணமாகவே “ஆக்ஷன் கிங்” என்று அவர் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அர்ஜூன் இப்போது வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். அர்ஜூனின் மூத்தமகள் ஐஸ்வர்யா தமிழில் பட்டத்து யானை, சொல்லிவிடவா ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. இப்போது ஐஸ்வர்யா ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அர்ஜுனின் 2வது மகள் அஞ்சனாவும் திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அஞ்சனா தற்போது தொழில் நிறுவனம் ஒன்றை துவங்கி இருக்கிறார். உண்ணும் பழங்களின் தோல்களைக்கொண்டு செய்யப்பட்ட ஹேண்ட்பேக்குகளை தயாரிக்கும் நிறுவனத்தை ஐதராபாத்தில் அவர் துவங்கி இருக்கிறார். இது தொடர்பாக அஞ்சனா கூறியதாவது “எனக்கு நடிப்பதில் பெரிய விருப்பமில்லை.
என் கவனம் முழுதும் சிறப்பாக ஒரு தொழிலை ஏற்று செய்யவேண்டும் என்பது தான். அதனைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன்” என்று கூறினார். அதன்பின் அர்ஜூன் இதுபற்றி கூறியதாவது “எப்போதுமே என் மகள்களிடம் நடிப்புதுறைக்கு வரும்படி நிர்பந்தித்தது கிடையாது. அவ்வாறு செய்யவும் மாட்டேன். எனினும் அவர்களது வாழ்க்கை பாதைக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருப்பேன். அவர்களின் விருப்பத்துக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன்” என்று கூறினார்.