பாறையில் இருந்து தவறி விழுந்து மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று காலை கொடைக்கானல்-பழனி மலை பாதையில் பி. எல். செட் அருகே ஒரு மான் இரைத்தேடி வந்தது. இந்நிலையில் அங்குள்ள பாறையில் ஏற முயன்ற போது நிலைதடுமாறி மான் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மானை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மான் பரிதாபமாக உயிரிழந்தது.
இதனை அடுத்து பிரேத பரிசோதனை செய்து மானின் உடலை காட்டு பகுதியில் புதைத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மான் சாம்பார் வகையைச் சேர்ந்த எட்டு வயது நிரம்பிய ஆண் மான் ஆகும். பாறையில் ஏற முயன்ற போது கீழே விழுந்து மான் படுகாயம் அடைந்ததா? அல்லது ஏதேனும் வாகனம் மோதி உயிரிழந்ததா? என்ற விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.