நடுரோட்டில் அரசு பேருந்து கண்டக்டரும், டிராக்டர் ஓட்டுநரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து அரசு பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்றபோது அவ்வழியாக சென்ற டிராக்டர் பேருந்து மீது உரசுவது போல வந்தது. இதனை பார்த்த கண்டக்டர், டிராக்டர் ஓட்டுனரிடம் சாலையோரமாக மெதுவாக செல்லுங்கள் என கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த டிராக்டர் ஓட்டுனர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அரசு பேருந்து கண்டக்டர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் டிராக்டர் ஓட்டுநர் கண்டக்டரை அடித்துள்ளார். இதனால் கோபமடைந்த கண்டக்டர் டிராக்டர் ஓட்டுநருக்கு சரமாரியாக அடி கொடுத்துள்ளார். அந்த வழியாக வத்தலகுண்டு நோக்கி சென்ற ஆம்புலன்ஸூக்கு கூட வழி விடாமல் சாலையில் பேருந்தை நிறுத்திவிட்டு கண்டக்டரும், டிராக்டர் ஓட்டுனரும் தகராறு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது