கடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்துவது அதிகமாகியுள்ளது. அதே நேரம் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மோசடி நடப்பதும் அதிகரித்து வருகின்றது. இது போன்ற நிகழ்வுகளை தடுக்க ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பொதுத்துறை வங்கியான sbi கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பண இழப்பை தடுக்க ஏடிஎம் இயந்திரங்களில் பத்தாயிரத்துக்கும் மேல் பணம் எடுக்கும் போது ஓடிபி எண் பதிவிடும் முறையை கொண்டு வந்துள்ளது.
இந்த முறையில் பத்தாயிரம் எடுக்க முயற்சிக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவிட்டால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். அதன் தொடர்ச்சியாக தற்போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடிகளை தவிர்க்க கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய முறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதாவது டோக்கனைசேஷன் என்பது கார்டு விவரங்களை “டோக்கன்” எனப்படும் மாற்றுக் குறியீடுக்கு மாற்றுவதாகும். இதன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும். இதில் நன்மை என்னவென்றால் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பற்றிய தனிப்பட்ட தகவல்களை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சேமித்து வைக்க முடியாது. அதனால் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துவோர் இந்த டோக்கனைசேஷன் முறையை பின்பற்றுவது சிறந்தது. இதனை பெற வாடிக்கையாளர்கள் வங்கியிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.