டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள வெங்கமேடு பகுதியில் பொன் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி வெள்ளகோவில் பகுதியில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் பொன் வெற்றி தமிழ்(10) பள்ளக்காட்டூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பொன் வெற்றி தமிழ் வெங்கமேட்டில் இருந்து நாகம்மநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டர் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.