விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் மானிய திட்டத்தில் விவசாயிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக தேசிய தோட்டக்கலை இயக்க திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் காய்கறிகள், பழப்பயிர்கள், பூச்செடிகள், மலைத்தோட்ட பயிர்கள், கலை மேலாண்மைக்கான நிலப் போர்வைகள், மண்புழு உரம் தயாரிக்க நிரந்தர மண்புழு உரம் படுக்கை, மினி டிராக்டர், பவர் டில்லர்கள், காய்கனி தள்ளுவண்டி உள்ளிட்டவற்றிற்கு மானியம் வழங்கப்படுகின்றது.
இந்த திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration-new.php என்ற தோட்டக்கலை துறையின் இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்த வருடம் 183 கிராமங்கள் அரசாங்கத்தினால் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட 80% சதவீத இலக்கீடு அந்த கிராமங்களில் செயல்படுத்தப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கின்றது.