சிரியாவின் இட்லிப் பகுதியில் சிரிய அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார் என்றும், இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ரஷ்யா உதவியுடன் அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் போர் விமானங்களைக் கொண்டு கடுமையான தாக்குதல் நேற்று முன்தினம் நடத்தப்பட்டதுடன், கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக சிரியாவில் அந்நாட்டு அதிபர் ஆசாத் (Bashar al-Assad) நடத்தும் தாக்குதலை மனித உரிமை அமைப்புகள் மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளன. முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன.
மேலும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு மட்டுமில்லாமல் இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு குடி பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.