நீங்கள் நினைத்தபடி நீதிமன்றம் செயல்பட வேண்டுமா என்று முருகதாஸ் வழக்கில் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் சுமார் 150 கோடியை ஒரே வாரத்தில் அள்ளியது என்று சொல்லப்பட்டது. ஆனால் இரண்டு , மூன்று வாரங்களுக்கு பிறகு பல விநியோகஸ்தர்கள் இந்த படத்தால் நாங்கள் நஷ்டம் அடைந்தோம் , எங்களுக்கு முருகதாஸ் பதில் சொல்ல வேண்டும் என்று , நடிகர் ரஜினியையும் சந்திக்க முற்பட்டனர்.
மேலும் நடிகர் முருகதாசின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விநியோகஸ்தரிடம் பயந்து போன முருகதாஸ் தனது வீட்டிற்கு பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி இராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் முருகதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எனக்கு எந்த மிரட்டலும் வராது என்று விநியோகஸ்தர் சங்கத்திலிருந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ கடிதம் வந்துள்ளது. எனவே நான் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். என்று தெரிவித்தார். இதற்க்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் , பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வீர்கள் , பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம் , வழக்கை வாபஸ் பெறுகின்றோம் என்று சொல்வீர்கள் , நீங்கள் நினைத்தபடி சென்னை உயர்நீதிமன்றம் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா ? என்று அதிருப்தியை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி.