மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபரை திருடன் என நினைத்து பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சேம்பாக்கம் பகுதியில் கடந்த சில வாரங்களாக 30 வயதுள்ள ஒரு வடமாநில வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் கொணவட்டம் பகுதியில் உள்ள பெரிய மசூதிக்கு அருகில் சுற்றி திரிந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த வாலிபர் “குழந்தை கடத்தி செல்பவராக இருக்கலாம் அல்லது வீட்டை நோட்டமிட்டு திருடுபவராக இருக்கலாம்” என சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அங்குள்ள பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைகளைப் பின்புறமாக கட்டி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். மேலும் அவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவலும் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் வசம் இருந்த வடமாநில நபரை மீட்டு விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்துள்ளது. இதனால் காயமடைந்த அந்த வாலிபரை சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.