பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) கூட்டங்களில் எடுக்கப்பட்ட பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை வருகிற அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் பகிர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககம் சாா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “பள்ளிகளின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக கிராம ஊராட்சிகளில் 5 நிலைக்குழுக்களில் ஒன்றாக கல்விக்குழு செயல்படுகிறது.
இக்கல்விக் குழுவில் பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை நிறைவேற்றுவதன் வாயிலாக பள்ளி வளா்ச்சிக்கு கிராம ஊராட்சிகளின் பங்களிப்பை உறுதிப்படுத்த இயலும். ஆகவே வருகிற அக்டோபர் 2ம் தேதி நடைபெற இருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், எஸ்எம்சி கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களைப் பகிா்ந்துகொண்டு விவாதிக்க வேண்டும். இதுபற்றி பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கிராமசபைக் கூட்டத்தில் பள்ளி சாா்பாக தலைமை ஆசிரியா், எஸ்எம்சி தலைவா், உறுப்பினா்கள் கலந்துகொண்டு பள்ளி வளா்ச்சி, கட்டமைப்பு, கற்றல்-கற்பித்தல், மாணவா் பாதுகாப்பு, இடைநிற்றல் குறித்து எஸ்எம்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்களை தொகுத்து கிராம சபைக் கூட்டத்தில் ஆலோசனைக்காக சமா்ப்பிக்க வேண்டும். முன்பாக கிராமச் சபை கூட்டத்தில் எஸ்எம்சி தீா்மானங்கள் பற்றி எடுக்கப்பட்ட முடிவுகளை இம்மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் எஸ்.எம்.சி கூட்டத்தில் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.